பக்கம்:பாரதியம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டோடும் பாரதி அறுபத்தாறுடனும் இணைத்தே இந்நூலை வெளியிட்டுள்ளார்கள். இச்சிறு காப்பியத்துள்ளே பாரதி தன் உள்ளத்தே பூத்ததோர் கற்பனையின் சூழ்ச்சியே இந்நூலின் தோற்றத்திற்கு வித்தென்று விளக்கினாலும் சூழ்ச்சி என்ற சொல் நமக்கு தெளிபொருளைத் தர மறுக்கின்றது. அத்துடன் தொடர்ந்து அவர் கொடுக்கும் வேண்டுகோள் இது. ஆன்ற தமிழ்ப்புலவீர் கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூlரோ? என்று நூலின் நுண்மையையும் உண்மையையும் காணும் பெரும் பொறுப்பை நம்மிடத்தில் அளிப்பதால் நூலின் படைப்பு நோக்கு நமக்கு என்னவென்றே புலப்பட வழியில்லாமல் போகின்றது. பாரதி இந்நூலுக்கு முன்னுரை வரைந்திருந்தால் இந்நூல் எந்நிலையில் ஏன் ஆக்கப்பட்டது என்பதை எப்படியும் விளக்கி இருப்பார். ஆனால் அவர் காலத்தில் இந்நூல் அச்சேறும் வாய்ப்பை இழந்ததனால் நாமும் முன்னுரையை இழந்துள்ளோம். இந்த முன்னுரையை இழந்ததனால் வந்துள்ள இடர்கள் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. குயில்பாட்டு ஒப்பற்ற இலக்கியம். புதுமைப்பித்தன் சொன்னது போல் பாரதி, நமக்குத் தந்த முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாரதிதாசன் என்றேதான் நாமும் சொல்லவேண்டி உள்ளது. குயில்பாட்டு மனிதனின் அழகுணர்ச்சிக்கு நிறைவளிக்கும் ஒரு நிரந்தர காவியம். அளவில் சிறியதாயினும் விந்தைமேவ நிற்கும் விரி வானமாகவே அதன் பொருட்பொலிவு விரிகின்றது. குயிற்பாட்டு காதலின் வாயிலாக வாழ்வை ஆராய்கின்றது. நூலில் குயில் பாடுகின்றது. உலகியலில் கூவுவதும் குரல் எழுப்புவதும் ஆண்குயிலே என்றாலும் இவ்விலக்கியத்தில் பெண்குயிலே பாரதி மொழியில் சொன்னால் பெட்டைக்குயிலே பேரின்பப் பண் பாடுகின்றது. நம் வாழ்வின் உணர்வு நிலைச் சின்னங்களாக மாறி வருகின்றது. குரங்கும் குதிபோடுகிறது. கவிஞனின் இதயமே குயிலாக மாறி ஒயிலாகப் பாடுகின்றதைப் பார்க்கின்றோம். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/48&oldid=817239" இலிருந்து மீள்விக்கப்பட்டது