பக்கம்:பாரதியம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலி சபதத்தில் வரும் பாஞ்சாலி, "துச்சாதனன் எழுந்தே அன்னை துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்” என்ற வாக்கியத்தில் அன்னையாய்க் காட்சியளிக்கிறாள். "தேவர்கள் பூச்சொரிந்தார். ஒம் ஜெயஜெய பாரத சக்தி என்றே”, என்ற பகுதியும் பாஞ்சாவி துகிலுரியப்பட்டவுடன் "சாவடிமறவரெல்லாம் ஓம்சக்தி, சக்தி, சக்தி என்று கரங்குவித்தார்” என்ற பகுதியும், பாஞ்சாலி பாத்திரம் பாரததேவியாகவும் சக்தியின் வடிவமாகவும் பாரதியில் ஏற்கனவே இருந்த உள் சட்டகத்திற்கேற்ப உருவாகின்றன என்று அறிய உதவுகிறது. கண்ணன் பாட்டில் கூட கண்ணனை ஆணாய், பெண்ணாய், குழந்தையாய், தாயாய், காதலியாய் இப்படி முரண்பட்ட பல்நிலைகளையும் ஏகமான ஒரு நிலையின் பல்வித விகசிப்பாய் காணும் போக்குள்ளது. “கண்ணம்மா - என் குழந்தை” என்ற பாட்டில் வரும் ‘என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்” என்ற வரி ஒரு சாதாரண மனிதகுலக் குழந்தையிடம் கொள்ளும் பேச்சை மீறிய ஒலிப்புடன் விளக்குகிறது. இதுபோல் 'கண்ணன்- என் சேவகன்” என்றபாடலில் “கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள் முதலாய் கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் திருஞானம் என்றும் ஒளிசேர்நலமனைத்தும் ஓங்கிவருகின்றன காண்,” என்கின்ற போதும் சேவகனைப் பற்றிய உலக நடப்பைத் தாண்டிய தொனி கேட்கிறது. கண்ணன் - என் தந்தை என்ற பாடலில், பாரதி 'மூவகைப் பெயர் புனைந்தே அவன் முக மறியாதவர் சண்டைகள் செய்வார்,” என்று சொல்கையில் தந்தையை முழுமுதற்பொருளாய்ப் பார்க்கிறார். இவ்வாறு கண்ணன்பாட்டும், பாரதி ஏற்கனவே கொண்டுள்ள தனது கருத்துருவச் சட்டகத்தின் ஒரு வெளிப்பாடாகவே விளங்குகின்றது குயிற்பாட்டில் வேதாந்தமாகப் பொருளுரைக்க இடமிருக்கிறதா என்று பாரதியே கேள்வி கேட்கிறார். வேதாந்தத்தின் சாரம் அத்தனையும் தனது கருத்துருவத்தில் கொண்டிருப்பவன் பாரதி என்பதை அவருடைய பிற சிந்தனை அமைப்புகளை அறிகையில் புரிந்துகொள்ளலாம். இந்நிலையில் வேதாந்தமாய்ப் பொருள் உரைத்தல் என்பது பாரதியின் உலகைப் புரிய ஏற்றுக் கொண்ட சட்டக அமைப்பினுள் வந்துவிடுகிறது என்று அறிகிறோம். 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/56&oldid=817249" இலிருந்து மீள்விக்கப்பட்டது