பக்கம்:பாரதியம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகை அறியும் கருத்துருவச் சட்டகம் தன்னில் விடுபட்டு விலக, அதிலிருந்து உருவான, அதே நேரத்தில் வேறான, கவித்துவ உள் சட்டகம் பாரதியின் கவித்துவ உலகமாக விளங்குகிறது. இந்நிலையில் கருத்துருவச் சட்டகமும், கவித்துவச் சட்டகமும் ஒத்த சில குணங்களைக் கொண்டிருந்தாலும் வேறுவேறு என்று அறிவது பிரச்னைகளைச் சரியாய் அணுக உதவும். கருத்துருவச் சட்டகம் கவித்துவச் சட்டகமாக உருவமாற்றம் பெறும்போது கவித்துவச் சட்டகத்திற்கான குணங்கள் ஒரு மையமாய்த் திரள்கின்றன. அந்தத் திரட்சி படிமங்களாய், கவிதை வரிகளாய், புதுப்பதச் சேர்க்கைகளாய், உருவகங்களாய் வடிவம் பெறுகிறது. இந்நிலை அடிப்படையில் பார்க்கையில் பாரதியின் கவித்துவம், ஒருவகை பைத்திய நிலை கொண்ட(Ecstatic) மூர்க்கமானகவித்துவ நிலை என்று சொல்லலாம். இதற்கு விளக்கமாகப் பாரதியின் பதப் பிரயோகங்கள் விளங்குகின்றன. அமுதம் (அமிழ்தம்) என்ற சொல், பாரதியிடம் பல்வேறு தொனிகளில், அர்த்தங்களில், சேர்க்கைகளில் கவித்துவம் பெறுகிற சொல்லாய் விளங்குகிறது. பாரதியின் கவித்துவ உள் சட்டகத்தின் குணத்தை இந்த ஒரு சொல் மூலம் தொட்டுவிட முயல்தல் சாத்தியம். கண்ணம்மா பற்றிச்சொல்கையில், அவளது உடல் அமுதமாக உள்ளது என்கிற பாரதி, தேசம் அமிழ்து (தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற எங்கள்தாயென்று கும்பிடடி பாப்பா, அமிழ்தில் இனியதடி பாப்பா) என்றும், இயற்கையைக்கூட அமுதம் (நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கேகுலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்) என்றும், சுப்பராம தீட்சிதர் என்கிற நபர்கூட அமுது (அந்தோ மறலி நம் அமுதினைக் கவர்ந்தான்) என்றும், தின்னும் பொருள்கள் அமுதம் (மின்னல் அனைய திறல் ஓங்குமே - உயிர் வெள்ளம் கரையடங்கிப் பாயுமே, தின்னும் பொருளமுதம் ஆகுமே...) என்றும், உலகம் அமுதமென்றும், (வியனுலகத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்), காதலை அமுதம் என்றும் (மையல் வளர்தல் கண்டாய், அமுதமழை பெய்யக் கடைக்கண் நல்காயே), சோதியை அமுதம் என்றும் (தேமலர்க்கொர் அமுதமென்ன சோதி), ஒவியர் இரவிவர்மா பற்றிப் பாடுகையில் ஒவியத்தை அமுதம் என்றும் (அமுதுண்டாக்கி, பந்தியில் பருகவென்றே படைத்தனன் அமரர் தன்மை) கூறுகிறார். 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/59&oldid=817252" இலிருந்து மீள்விக்கப்பட்டது