பக்கம்:பாரதியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தின் குணங்களைப் பெற்றவர்கள். அந்தச் சமூகத்தின் அடிப்படை அம்சம் கட்டுபாட்டற்ற சுதந்திரம். தனிநபர்களது தளைகள் முற்றிலுமாக அறுக்கப்பட்ட சமூகம் அது. அதன் தோற்ற காலத்திலேயே இந்த சுதந்திரம் உலகின் எல்லாப் பொருள்களையும் மனித சுதந்திரத்திற்கு எதிரிகளாகக் காணும் போக்கு வளர்ந்தது. “மனிதன் சுதந்திரமாகப் பிறந்தவன். ஆனால் எல்லாப் பக்கங்களிலும் சங்கிலிகளால் கட்டப்பட்டவன்” என்ற ரூஸோவின் கூற்று இதை மிக அற்புதமாகச் சுருக்கிக் கூறுகிறது. தனிமனிதனுக்குரிய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற போக்கு அதிகமாக இருந்தது. மனிதன் ஏற்ற தாழ்வு இல்லாத வாழ்வு வாழ வேண்டும் என்ற லட்சியமானது பூர்ஷ்வாசமூகத்தில் உணர்வுகள் எல்லோருக்கும் சமம்; என்ற கருத்து வடிவத்தில் வெளிப்பட்டது. கோபம் எல்லோருக்கும் சமம்; வருத்தம் எல்லோருக்கும் சமம்; இது போன்று மன உணர்வுகள் யாவருக்கும் பொதுவானது. சாதாரண மக்களது உணர்வும், அரசனது உணர்வும் ஒன்றானது என்ற கருத்து சமத்துவச் சமூகத்தில் வலுப்பெற்றது. ஆனால் நடைமுறையில் வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்தன என்பது வரலாறு அறிந்த உண்மை. நடைமுறையில் நிலவிய பொருளாதார அசமத்துவம், கருத்து சமத்துவத்திற்கு முரண்பட்டுத்தான் இருந்தது. ஆனால் இதுவரை இருந்த நில உடைமைச்சமூகத்தின் சிந்தனைக் கட்டுப்பாட்டிலிருந்து, புதிய சமூகத்தில் இடம்பெற்ற மனிதன், கட்டவிழ்ந்த உணர்ச்சி களோடு எழுந்தான். உலகின் எல்லா விஷயங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற துடிப்புமிக்கவனாக இருந்தான். புதிய புதிய பாதைகளில் எல்லாம் அவன் சிந்தனை செல்லத் தொடங்கியது. தனி மனித உணர்ச்சி கலை - இலக்கியத்துறையில் மையமாக விளங்கத் தொடங்கியது. பாரதியின் காலத்திற்குச் சற்று முன்பு தான் இத்தகைய போக்கு தமிழ் நாட்டில் தோன்றத் தொடங்கியது. வெள்ளையர்கள் இங்கு வந்து தொழில் தொடங்கிய பின்பு, அவர்களது புதிய சமூக அமைப்பு இங்கு பல மாறுதல்களை உருவாக்கியது. இதுவரை இங்கு நிலவிவந்த சமூக சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டது. இந்த மாறுதலை ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தில் காணலாம். கலா நிதி க. கைலாசபதி கூறுவது போல், இந்த நாவலில் முதன் முதலாக ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியர் சித்தரிக்கத் தொடங்குகிறார். குண தோஷங்களைச் சித்தரிக்கத் தொடங்குகிறார்: 65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/67&oldid=817268" இலிருந்து மீள்விக்கப்பட்டது