பக்கம்:பாரதியம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கடி, சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.” கவிதை, மக்களுக்கு விளங்கும் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்படுதல் வேண்டும் என்பது பாரதியின் வாதம். பழைய நிலவுடைமைச் சமூகக் கவிதை பண்டிதர்கள் புரிந்து கொள்வதற்கே அரிதாக இருந்த ஒன்று. தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதைவிட இலக்கணத்திற்கு ஏற்றபடி கவிதை பாடுவதுதான் மிக உயர்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது. புலவர்கள் புலமைத் தொழிலைச் செம்மையாகச் செய்வதற்குரிய வழி வகைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தனர் இதை பாரதியே கேலி செய்கிறார். “நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங்கிற்று, ருசி குறைந்தது. கரடுமுரடான கல்லும் கள்ளிமுள்ளும் போன்ற பாதை நம் கவிகளுக்கு நல்ல பாதையாகத் தோன்றலாயிற்று. கவிராயர் 'கண் என்பதைச் சக்கு என்று சொல்லத் தொடங்கினார். ரசம் குறைந்தது சக்கை அதிகப்பட்டது. உண்மை குறைந்தது. பின்னல் திறமைகள் அதிகப்பட்டன.” (பாரதியார் கட்டுரைகள் - புனர் ஜென்மம் பாரதி புத்தக நிலையம் பக்.67) இத்தகைய நிலைமை பாரதி காலத்தில் தோன்றி உணர்ச்சி விடுதலைக்குப் பெரிய தடையாக இருந்தது. தனிநபர்களது கொந்தளிக்கும் உணர்வுகளை இந்தக் கவிதைக்குப் போக்கு பிரதிபலிக்காது. இதற்குக் கவிதை பற்றிய புதிய பார்வை தேவையாகிறது. இந்தப் புதிய பார்வையைப் பாரதி அவருக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்களிடமிருந்தும், வெளிநாட்டுக் கவிஞர்களிட மிருந்தும் பெற முயற்சிக்கிறார். பாரதி கம்பனது கவிதைக் கோட்பாட்டை உதாரணமாகக் காட்டுகிறார். கம்பன், கவிதையை கோதாவரி நதியின் விசாலத் 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/74&oldid=817286" இலிருந்து மீள்விக்கப்பட்டது