பக்கம்:பாரதியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் படைத்த காலத்தில் இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு நிலை இருந்ததை யாவரும் உணர்வர். இதைக் கவிதையிலும், இசையிலும் வெளிப்படுத்திக் காட்டவேண்டும் என்று பாரதி முயல்கிறார். கவிஞன் அல்லது பாடகன் மட்டும் உணர்ச்சிகரமான நிலையில் இருந்தால் போதாது. சுவைஞனுக்கும் அதே நிலை ஏற்படுதல் வேண்டும். இதை பாரதி அவருடைய உரைநடையில் விவரிக்கிறார். குயில் பாட்டில் கூறுகிறார்: “முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவழிய பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவி னிகழ்ச்சியிலே - கண்டேன்யான்” 'கவிதா தேவி அருள் வேட்டல்’ என்ற கவிதையில் பின்வருமாறு எழுதுகிறார். “...நின்னொடு தமியனாய் நீயே யுயிரெனத் தெய்வமும் நீயென நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்” உணர்ச்சிகரமானநிலையில் கவிஞன் உலகத்தையே மறந்து கவிதைப் பொருளுடன் ஒன்றிவிடுதல் வேண்டும் கவிஞன் ஒரு கனவு நிலையை அடைகிறான். கவிதை கலை என்பதே ஒருவகைக் கனவு நிலைதான். இந்தக் கனவு நிலையில் யதார்த்த உலகில் இருந்து கலைஞன் விலகிச் சென்றுவிடுகிறான். ஆனால் அதே யதார்த்த உலகைக் கலை உலகில் மறுபடியும் படைக்க முயல்கிறான். இந்த நிலையைத்தான் பாரதி “நெட்டைக் கனவு’ நிகழ்ச்சி என்று குறிப்பிடுகிறார். இந்த நிலை உணர்ச்சிகரமான நிலை. இது வெறி மிகுந்த நிலை. இது களிப்பு மிகுந்த நிலை. இதை பாரதி கவிதைக்கு உயிர்நிலையாகக் கொள்கிறார். இது பழைய கவிதை மரபிலிருந்து வேறுபட்ட ஒன்று. இதே உணர்ச்சி நிலையை இசைக்கலையிலும் காண்கிறார் பாரதி. இசைக்கலைக்கு மிக அவசியமான ஒன்று பாவம். பாவம் இல்லாமல் பாடுவது என்பது சூத்திரத்திற்கு ஏற்ப பாடல் இயற்றுவது போன்றது. பாவம் மிகுந்த இசை எல்லோரையும் பரவசப்படுத்திவிடும். இசையின் மூலம் வெவ்வேறு வகையான உணர்ச்சிகளைத் தோற்றுவிக்க முடியும். பாரதி இசைக்கலையில் பாவம் அதிகமாக இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/76&oldid=817290" இலிருந்து மீள்விக்கப்பட்டது