பக்கம்:பாரதியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டுமல்லாமல் “பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடல் வேண்டும்” என்று கூறுகிறார். இந்தச் சமூகம் முழுவதையும் கட்டிக்காக்கும் பொறுப்பு கலைஞனுக்கு உண்டு என்பதை இங்கு விளக்குகிறார். பாரதியின் இந்தக் கருத்து புதிய சமூகம் தோன்றக்கூடிய காலத்தில் எழுந்ததாகும். இது ஒரு சமூக அவசியம் காரணமாக எழுந்தது. இலக்கியவாதியின் கடமை சமூகத்தைச் சித்திரிப்பது மட்டுமல்ல, மாற்றுவதும் கூட என்ற நோக்கம் பாரதிக்கு உண்டு. இந்த நோக்கமானது பாரதி காலத்திய சமூக எழுச்சியில் ஒரு அவசியமாக இருந்தது. பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடு, தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே புதுமையான ஒன்று. ஒரு இலக்கிய கர்த்தாவாக மட்டுமல்லாமல், தாம் வாழ்ந்த காலத்தின் சமூக மாறுதல்களையும் அறிந்து கலை இலக்கியம் பற்றி ஒரு கண்ணோட்டம் பெற்றவர்.அவர். அவர் காலத்திய பூர்ஷ்வா சமூக எழுச்சியினால் தோன்றிய விடுதலைபெற்ற தனிநபர் எழுச்சியின் விளைவாகக் கவிதையில் இதுவரை காணமுடியாத உணர்ச்சியையும், பாவத்தையும் தோற்றுவித்தவர் பாரதி. கலை இலக்கியத்தில் பிரபுத்துவத் தன்மை நிலவிவந்த காலத்தில், அது, நாட்டார் வழக்காற்றியல் தன்மை பெறவேண்டும் என்று விரும்பியவர் பாரதி; கலை இலக்கியக் கோட்பாட்டை ஜனநாயக தன்மை உள்ளதாக மாற்றுவதற்குப் பாடுபட்டவர். இத்தகைய போக்கு ஓரளவிற்கு மேலை நாட்டுப் புனைவியல் கவிஞர்களது கோட்பாடுகளுக்கு அருகில் இருந்தாலும், இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பாரதியின் இந்தச் சிந்தனையானது புரட்சிகரமான உணர்வுடன் வெளிப்படுகிறது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/79&oldid=817295" இலிருந்து மீள்விக்கப்பட்டது