பக்கம்:பாரதியம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்கள் பாரதியின் சிந்தனைப் பரப்பை அதிகப்படுத்துகின்றன. அடிமைத்தளையிலிருந்து பெற்ற விடுதலைக்கும் மேலா, ஏதோவொன்றையும் அவர்ரஷ்யாவில் காண்கிறார். “மனித ஜாதி முழுமைக்கும் விடுதலை உண்டாகப் போகிறது. ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனிவரப்போகிற நற்காலத்தின் முன்னடை யாளங்களில் ஒன்று” என்று எழுதினார் பாரதியார். உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய அந்தச் சிறப்பு எது என்று விரிவாக அவரே எழுதவும் செய்கிறார். தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சர்வதேச நிகழ்ச்சிகளை ஆழ்ந்து நோக்கியவர் பாரதியார். 'காலைப்பொழுது என்ற கவிதை கூட அவரது ரஷ்யா பற்றிய அபிப்பிராயத்தையே வெளியிடுவதாக அறிஞர்கள்கூறுகின்றனர். 'காக்காய்ப்பார்லிமெண்ட் என்ற உருவகக் கட்டுரையும் பாரதியின் சர்வதேசச் சிந்தனையை நன்கு காட்டுகிறது. இவற்றிலெல்லாம் கொடுங்கோன்மை வீழ்ச்சியைத் தாண்டி விளைந்த நன்மையொன்றினைப் பாரதி காணுகிறார். ..."மனித ஜாதி முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி மானிடருக் குள்ளே இயற்கையாலும் மானிடர் தாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளாலும் எத்தனை வேறுபாடுகள் காணப்பட்டாலும், இந்த வேறுபாடுகளைக் கருதிச் சிலருக்கு அதிக செளகரியங்களும், பலருக்குக் குறைந்த செளகரியங்களும், சிலருக்கு மதிப்பும், பலருக்கு அவமதிப்பும், சிலருக்கு லாபங்களும் பலருக்கு நஷ்டங்களும் ஏற்படுத்தியிருப்பது தவறு என்பதும், ஒவ்வொருவரும் சகோதரரைப் போல் பரஸ்பர அன்புடனும், மரியாதையுடனும் வாழ்வதே நியாயம் என்பதும் நவீன ஐரோப்பியச் சித்தாந்தங்களிலே மிகவும் முக்கியமான சித்தாந்தமாகும்...” இவ்வாறு பாரதியார்சிந்திக்கிறார், ஏற்றத்தாாழ்வுகள் நிறைந்த உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற வேட்கையில் அவர்உடன்படுகிறார். ரஷ்யா இந்தப் பெரிய முயற்சியில் பெற்ற வெற்றியில் அவருக்கு மகிழ்ச்சியே உண்டாகிறது. "உடைமையாவது களவு” என்று கூறியவர்களுடன் ஒத்துப் போகிறார். “ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம், ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது” என்கிறார் பாரதியார். 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/86&oldid=817310" இலிருந்து மீள்விக்கப்பட்டது