பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானரதம்

11

என்னென்பேன்? ஒருவனது முகத்திலுள்ள அழகையும், குளிர்ச்சியையும், இளமையையும் இந்தக் கவலைகளே அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியை மாற்றிப் பசலையும், உடல் நிறம் மங்குதலும் உண்டாக்கி விடுகின்றன. நெற்றியிலே வரிகளும், கன்னங்களிலே சுருங்கல்களும், இந்த நீசக் கவலைகளினாலேயே ஏற்படுகின்றன. எனது தொண்டையின் இனிய குரல் போய், கடூரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும், தோளிலும் இருந்த வலிமை நீங்கிப்போய்விடுகிறது. இரத்தம் விரைவாக ஓடுதலின்றி, மாசு நீரோடை போல மந்தம் அடைகின்றது. கால்களில் தீவிரமில்லாமற் போய்விடுகிறது. கவலைகள் என்ற விஷ ஜந்துக்கள் ஒருவனுடைய சரீரத்தை உள்ளூர அரித்து விடுகின்றன. சரீரத்தை மட்டுமா? அறிவையும் பாழாக்குகின்றன. மறதியை அதிகப்படுத்தி விடுகின்றன. முக்கியமான செய்திகளெல்லாம் நல்ல சந்தர்ப்பத்திலே நினைவிற்கு வராமல் போய் விடுகின்றன. படித்த படிப்பெல்லாம் பாலைவனத்திலே பெய்த மழைபோல நிஷ்பலனாய் விடுகின்றது. அறிவிலே பிரகாசமில்லாமல், எப்போதும் மேகம் படர்ந்தது போலாய்விடுகிறது. யோசனை தட்டுகிறது. ஐயோ! இந்தக் கவலைகளாகிய சிறிய சிறிய விஷப் பூச்சிகளுக்குள்ள திறமை வைத்திய சாஸ்திர நிபுணர்கள் கூறும் மகா கொடூரமான—கண்ணுக்குத் தெரியாத— நோய்ப் பூச்சிகளுக்குக் கூடக் கிடையாது.

“ஞானரதமே, நீ நம்மை இப்போது கவலையென்பதே இல்லாத உலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்” என்று கட்டளையிட்டேன். அப்போது மனம் வந்து ரதத்தைத் தடுத்துக்கொண்டது. “அது அத்தனை சுகமான உலகமன்று. கவலை இல்லாமலிருந்தால் மட்டும் போதுமா? வேறு, இன்பங்கள் அனுபவிக்கக் கூடிய இடம் ஏதேனும் தமக்குத் தோன்றவில்லையா? கவலையே இல்லாத இடத்தில் சுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும்,—மேலும்,— என்னவோ; இன்ன காரணமென்று சொல்ல முடியாது.