பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

பாரதியார்‌ கதைகள்‌

ஏற்பட்ட போதிலும் தீங்கில்லையென்று தீர்மானம் செய்தாள். ஒருவன் காலில் ஆழமாக விஷமுள் பதிந்திருக்கையில் அதை ஊசி கொண்டெடுக்கும்போது அவன் அந்த ஊசி குத்தும் வேதனையைப் பொறுக்கமாட்‘மல் முள்ளையெடுக்க முயலாதபடி மிட்டாய் தின்று தன் மனதை அந்த நோயினின்றும் புறத்தே செலுத்த வேண்டுமென்று விரும்புவானாயின், அவனுக்கு ஹிதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாகக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்து விட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷமுள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டு விட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷமுள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமை யன்றோ? அதற்கு நாம் இடங்கொடுக்கலாமோ? அவன் அழ, அழ, ஊசியை அழுத்தி விஷமுள்ள எடுத்தெறுந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரணமேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமானது?

இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட, சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அமர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்கமுடியவில்லை.

காதற்கோயில் மிகத் தூய்மைகொண்ட கோயில் . ஒரு முறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன.