பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில வேடிக்கைக்‌ கதைகள்‌

341

விஷயம் உமக்கெப்படித் தெரிந்தது?” என்று கேட்டார். அப்போது குள்ளச்சாமியார் சொல்லுகிறார்: அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்வதைக் கவனி: ஹிந்து தேசத்தினுடைய ஜீவனை யுக யுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடூரமான கலியில் உலகம் தலை கீழாகக் கவிழ்ந்துபோகும் சமயத்தில் கூட ஹிந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையும் காக்கக்கூடிய ஜீவசக்தி இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோபலத்தாலன்றி வேறில்லை. ஹா, ஹா, ஹா, ஹா! பலவிதமான லேகியங்களைத் தின்று தலைக்கு நூறு நூற்றறைம்பது பெண்டாட்டிகளை வைத்துக் கொண்டு தடுமாறி நாள் தவறாமல் ஒருவருக்கொருவர் நாய்களைப்போல அடித்துக் கொண்டு, இமயமலைக்கு வடபுறத்திலிருந்து அன்னியர் வந்தவுடனே எல்லாரும் ஈரச் சுவர் போலே இடிந்து விழுந்து ராஜ்யத்தை அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையினால் உங்கள் தேசம் பிழைத்திருக்கிறதென்று நினைக்கிறாயா? போது விடிந்தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணார்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணர்களால் இந்த தேசம் சாகாத வரம் பெற்று வாழ்கிறதென்று நினைக்கிறாயா? உங்கள் வைசியருடைய லோபத் தன்மையால் இந்த நாடு அமரத் தன்மை கொண்டதா? சூத்திரருடைய மௌட்டியத்தாலா? பஞ்சமருடைய நிலைமையாலா? எதால் ஹிந்துஸ்தானத்துக்கு அமரத் தன்மை கிடைத்ததென்று நீ நினைக்கிறாய்?

அடா, வேணு முதலி, கவனி. நீ யுத்தம் முடிந்த பிறகு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் போய் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டப் போவதாகச் சொல்லுகிறாய். நீ ஹிந்து ஸ்தானத்து மகாயோகிகளின் மகிமை தெரியாமல் ஹிந்து மதத்தை யெப்படி நிலைநிறுத்தப் போகிறாய்,—அதை நினைக்கும்போதே எனக்கு நகைப்புண்டாகிறது.