பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

பாரதியார்‌ கதைகள்‌

அதனால், காற்றுத் தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்.

காற்றுத் தேவனை வணங்குவோம்.

அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது.

எவ்விதமான அசுத்தமும் கூடாது.

காற்று வருகிறான்.

அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்.

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.

அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

அவன் நல்ல மருந்தாகி வருக.

அவன் நமக்கு உயிராகி வருக.

அமுதமாகி வருக.

காற்றை வழிபடுகின்றோம்.

அவன் சக்தி குமாரன்.

மகாராணியின் மைந்தன்.

அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்.

அவன் வாழ்க.