பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

பாரதியார்‌ கதைகள்‌

ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண், மற்றொன்று பெண். கணவனும், மனைவியும்.

அவை யிரண்டும் ஒன்றையொன்று மோகப் பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலே இருந்தன.

அத் தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண்கயிற்றுக்குக் கந்தன் எனப் பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் “வள்ளியம்மை”. (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

“என்ன கந்தா, சௌக்கியந்தானா? ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துட்டேனோ என்னவோ? போய் மற்றொரு முறை வரலாமா?“ என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்: “அடபோடா, வைதிக மனுஷன்!உள் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?“ என்றது.

“சரி, சரி, என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்“ என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன் கட கடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்குச் சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?