பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பாரதியார் கதைகள்

விற்றுச் செட்டாகக் குடித்தனம் பண்ணித் தன் பிள்ளையை வளர்த்து வந்தாள். மாணிக்கஞ் செட்டிக்குப்பத்து வயதானவுடன் அவனை ஒரு பெரிய வியாபாரி தனது கடையிலே மாதம் அரை ரூபாய் சம்பளத்துக்கு வைத்துக் கொண்டான். இவன் தாயாரிடத்திலிருந்து செட்டு, கருத்து முதலிய நல்ல குணங்களைப் பயின்றவனாதலால், பெரிய வியாபாரிக்கும் இவன் மேலே தயவும் நம்பிக்கையும் உண்டாயின? பெரிய வியாபாரிக்குப் பிள்ளையில்லை. ஒரே பெண். அவள் பெயர் மரகதவல்லி, நாளடைவில் மாணிக்கஞ் செட்டியை வியாபாரி தன் கடையில் பங்காளியாகச் செய்து கொண்டான். தன் மகளை இவனுக்கே விவாகம் செய்து வைத்தான். அவன் இறந்த பிறகு உடைமை யெல்லாம் மருமகனுக்கே வந்துவிட்டது. மதுரை மாசி வீதி மளிகைக் கடை மாணிக்கஞ்செட்டி என்று பிரக்யாதி ஏற்பட்டு விட்டது. இந்த மாணிக்கஞ் செட்டியினிடம். பதினாறு வயதுள்ள மானி அய்யன் என்ற பார்ப் பாரப் பிள்ளை ஒருவன் வந்தான்.

“ஐயரே, என்ன வேண்டும்?” என்று செட்டி கேட்டான்.

“தங்களுடைய கடையிலே எனக்கொரு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்“ என்று சிறுவன் சொன்னான்.

“உனக்கென்ன தெரியும்?“

“எனக்கு எண்சுவடி முழுதும் நன்றாகத் தெரியும். கணக்குப் பதிவு தெரியும். கூடிய வரை எழுதப் படிக்கத் தெரியும்.“

இதைக் கேட்டவுடனே செட்டி நகைத்தான்.

“பார்ப்பாரப் பிள்ளைகள் வந்தால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென்று சொல்லும் வழக்கமே கிடையாது. எதுவும் தெரியும். ஐயரே, போய் வாகும். இவ்வளவு தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் வேலைக்கு வேண்டாம்“ என்று சொன்னான்.

“சரி“ என்று மானி அய்யன் வெளியிற் போனான். “இங்கே வாரும் ஐயரே“ என்று மாணிக்கஞ் செட்டி