பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பாரதியார் கதைகள்

எனக்குத் தெரியும். நான் எப்படிக் கொடுக்காமலிருப்பது? செட்டியாரிடம் நேரிலே போய் கேட்டுக் கொண்டு செய்யலாமென்றால், கடையை யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? மறவனிடம் ஒப்புவித்துவிட்டு வரலாமென்றாலோ ஐந்து துலாம் சர்க்கரைக்கு நம்பக் கூடாத மனிதனிடம் கடையை விட்டு விட்டு வரலாமா? நான் சர்க்கரையைக் கொடுத்து விட்டேன். செட்டியார் வந்தார். ‘சங்குத் தேவனுக்குச் சர்க்கரை கொடுத்தாயா? என்று கேட்டார். ஆ மென்றேன். எவ்வளவு கொடுத்தாய் என்றார். ஐந்து துலா மென்றேன். யாருடைய உத்தரவின் மேலே கொடுத்தாய்? என்றார். உங்களுடைய உத்தரவின் மேலே என்றேன். நான் எப்போது உன்னிடம் உத்தரவு கொடுத்தேன் என்றார். சங்குத் தேவனிடம் உத்தரவு கொடுத்ததாக அவன் சொன்னா னென்றேன். அவன் சொன்னால் உனக்குப் புத்தி எங்கே போச்சுது என்றார். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. என் புத்தியைப் பற்றிப் பேச்சில்லை. உம்முடைய சிநேகிதன்தானே அவன்? பொய் சொல்லமாட்டா னென்று நினைத்துக் கொடுத்து விட்டேன். குற்றமாக இருந்தால் என்மேல் பற்று எழுதி விடலாம்‘ என்று சொன்னேன். முருகச் செட்டிக்கு என் மேலே நெடுநாளாகக் கோபம். சிதம்பரத்திலிருந்து வந்திருக்கும் அவருடைய மைத்துனனை என்னுடைய ஸ்தானத்துக்கு வைத்து விட வேண்டுமென்று அவருக்கு வீட்டிலே போதனை ஏறிவிட்டது. என்னை வெளியே போகச் சொல்வதற்கு என்ன உபாயம் செய்யலாமென்று பல நாளாக யோசனை செய்து வந்தார். இதனால் தான் மரியாதையாகச் சொல்லிய வார்த்தையை அவர் அதிகப் பிரசங்கித்தன மென்று பாராட்டி ‘ஐயரே! நாளை முதல் வேறு கடையிலே வேலை பார்த்துக்கொள்ளும். இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது சம்பளம் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போகலாம்‘ என்று சொன்னார். நான் சரியென்று விலகிவிட்டேன். இவ்வளவுதான் நடந்த சங்கதி.”