பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பாரதியார் கதைகள்

குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்திய முள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?“

மாணிக்கஞ் செட்டி—“ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். குமாஸ்தாக்களிடமுள்ள குற்றத்தைச் சொன்னுல், உமக்கு விஷயம் பூராவாகத் தெரியும். குமாஸ்தாக்களிடம் நாணயமில்லை. பணக்கார பிள்ளைகள் வெளியே ஒரு கடையில் சிறிய சம்பளம் வாங்கி வேலை பழகப் போவது கௌவரக் குறைவென்ற மூட எண்ணத்தால் கிடைப்பதில்லை. வருவோனெல்லாம் கோவணாண்டி ; பணப் பொறுப்பையும் காரியப் பொறுப்பையும் அவர்களிடம் அதிகமாக ஒப்புவிக்க இடமில்லை. அவர்களுக்குக் குற்றேவல் செய்து தயவு சம்பாதிப்பதிலே தான் உற்சாக முண்டாகிறது. உழைப்பிலும் கருத்திலும் உற்சாகமில்லை. எப்படியிருந்தாலும், ஏழைக்கு ஏழைப் புத்திதானே ஏற்படுங்காணும்? நமது பந்துவாக இருந்தால் மூடனானாலும் அதிக வஞ்சனை பண்ணமாட்டா னென்று நினைக்கலாம்.“

மானி அய்யன்—“அதுதான் நினைக்கக் கூடாது. ‘உடன் பிறந்தார் சுற்றத்தாரென்றிருக்க வேண்டா; உடன் பிறந்தே கொல்லும் வியாதி’ என்ற வசனம் கேட்டதில்லையோ?“