பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவதந்திரக் கதைகள்

91

மாணிக்கஞ் செட்டி—“தெரியுங்காணும்! ஆகவே இரண்டும் கஷ்டமாகிறது. மடத்தாண்டி கையிலே பணத்தைக் கொடுப்பது புத்திசாலித்தனமா? ஊரான் கெடுத்துக் கெடுவதைக் காட்டிலும் நம்மவனால் கெடுவோமே!”

மானி—“செட்டியாரே, கெடவா வியாபாரம் பண்ணுகிறோம். ஜீவிக்க வியாபாரம் செய்கிறோம். ஓரிடத்திலே தக்க காரியஸ்தன் கிடைக்காவிட்டால் மற்றோரிடத்திலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டும். எந்தக் கணக்குக்கும் ஒரு தீர்வை யுண்டு; எந்தச் சிக்கலுக்கும் அவிழ்ப்புண்டு.”

இவ்வாறு மானி அய்யன் சொல்லியதைக் கேட்டு மாணிக்கஞ் செட்டி சிறிது நேரம் யோசனை செய்யலானான்,

மாணிக்கஞ் செட்டி யோசிக்கிறான்:—

”பார்ப்பான் கெட்டிக்காரன். நாம் எடுத்திருக்கும் ஆலோசனைக்கு இவனை உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது நோக்கத்தை இவன் தெரிந்து கொள்ளக்கூடாது. தெய்வம் விட்டது வழி. ஒரு கை பார்ப்போம்.”

இப்படி யோசித்து மாணிக்கஞ் செட்டி சொன்னான் :—

”ஐயரே, ஒரு மூன்று மாசத்துக்கு உம்மை ஒரு சோதனைக்காகக் கடையிலே அமர்த்திக் கொள்ளுகிறேன். மூன்று மாசத்துக் கப்பால் என் மனதுக்குப் பிடித்தால் வேலை உறுதிதான். பிடிக்காவிட்டால், விலகிக் கொள்ள வேண்டும். முதல் மூன்று மாசத்துக்குச் சம்பளம் கிடையாது. உம், சம்மதமா?”

பார்ப்பாரப் பிள்ளை தன் மனதுக்குள்ளே “அட லோபிப் பயலே“ என்று வைது கொண்டான்; சொல்லுகிறான்:— “செட்டியாரே, மூன்று மாசம் வேலை பார்க்கிறேன். பிறகு திருப்தியானால் வேலை உறுதி, இல்லாவிட்டால் அவசியமில்லை. அது உங்களுடைய இஷ்டம்போலே. ஆனால் உழைக்கிற நாள் சம்பளம் கையிலே கொடுத்து விடவேண்டும். சம்மதமா?” என்றான்.

.