பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிலின் காதற் கதை

19

5.பண்ணே, பண்ணே, பண்ணே;
          பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
          மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)
6.புகழே, புகழே, புகழே;
          புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
          இகழே, இகழே, இகழே. (காதல்)
7.உறுதி, உறுதி, உறுதி;
          உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
          இறுதி, இறுதி, இறுதி. (காதல்)
8.கூடல், கூடல், கூடல்
          கூடிப் பின்னே குமரன் போயின்,
          வாடல், வாடல், வாடல். (காதல்)
9. குழலே, குழலே, குழலே;
          குழலிற் கீறல் கூடுங்காலை,
          விழலே, விழலே, விழலே. (காதல்)

3 குயிலின் காதற் கதை


மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்.
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ) ஒன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுஇவ் 5
ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று,
“பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!” எனக் கேட்டேன். 10
மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்;
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன் என்றதுவால்,
வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்; 15