பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குயிற் பாட்டு

ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்;
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா(து)” தென்றேன்,
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:—
“மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல், 20
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்;
அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ, 25
யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்;
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும் 30
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும் 35
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் 40
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்;
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப(து) தென்னையோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்,