பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிலும் மாடும்

29

தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே! 75
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்? 80
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்,
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்;
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! 90
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்;
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில் 95
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! 100
செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனும் ஓர்
வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்
கையினில் வாயெடுத்துக் காளையின் மேல் வீசினேன்;
மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட,
வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் 105