பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

குயிற் பாட்டு

மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45
நாடிச் சினத்துடனே நானா மொழிகூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
”காயும் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனு்குப் பெண்டாக நேர்ந்தாலும்,
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50
மாதமொரு மூன்றில் மருமம் சிலவெய்து
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா” என்றுரைத்தாய்;
காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்;
மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின் நாமம்;
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, 60
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து 65
மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான், மையல் கரைகடந்து
நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாது நீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்; 70
நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்;
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைத்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே, 75
‘வஞ்சித் தலைவன் மகன்யான்’ எனவுரைத்து,
“வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்,
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்;