40
குயிற் பாட்டு
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத்(து) எனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
245
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்;
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண்(டு) ஆங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தபின்னே,
250
பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் வரிசையெல்லாம்
255
ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன்;
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,
260
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?