பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குயிற் பாட்டு

கலையின் முடிமணியாகவும் ஒளிரும் உயர்வுடையது குயிற் பாட்டு. தன்னுணர்ச்சியின் திரட்சி வடிவாய்த் திகழும் இப்பாட்டு, தன்னுணர்ச்சிக் கவிதைக்கே (Lyric) ஒரு சிறந்த எடுத்துக் காட்டு எனலாம். கடவுளரையும் காவலரையும் கன்னியரையும் கதைப்பொருளாகக் கொண்டு, பண்டைப் புலவரெல்லாம் பைந்தமிழ்க் காவியம் படைத்திருக்கவும், சிறியதொரு பறவையாகிய குயிலைக் கதைப் பொருளாகக் கொண்டு, இலக்கியம் படைத்தளித்த பெருமை கவிஞர் பாரதியாருக்கே உரிமையாகும் !

கீதம் பாடும் குயிலின் குரல் நாத இன்ப வெள்ளத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞராகிய பாரதியார், அக்குயிலே முன்னேப் பிறவியில் வேடர் குல வேந்தன் மகளாகப் பிறந்து, சேர வேந்தன் செல்வ மைந்தனாகத் தோன்றியிருந்த தம்மைக் காதல் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திய திறத்தைக் குயிலின் வாயிலாகவே பொதிய மலை முனிவர் புகன்ற வரலாறென்று எடுத்துரைத்து, எல்லோரையும் காதல் இன்ப வெள்ளத்தில் மூழ்குமாறு செய்யும் அவரது கவித்திறம் படித்துப் படித்துச் சுவைத்து இன்புறத்தக்கதாகும். -

கவிஞர் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த நாளில் அந்நகரின் மேற்பால் அமைந்த மாஞ்சோலேக்கு மாலை நேரத்தில் உலாப்போதல் சாலப் பெருகிய வழக்கம் போலும். அச்சோலைக்கண் பல்வேறு பறவையினங்களும் கூடியிருந்து பேரொலி யெழுப்பும். அவற்றிடையே குயிற் பறவைகள் இன்னிசை பாடி, வருவோர்க்குப் பெருமகிழ்வூட்டும். அந்த இன்பத்தை நாள்தோறும் நன்கு துய்த்த பாரதியார் ஒரு நாள் மாலை வேளையில் வழக்கம் போல் சோலை புகாது, வீட்டிலிருந்து தமிழாய்ந்து கொண்டிருந்தவர் களைப்பு மிகுதியால் தம் விழிகளைத் துயில் தழுவ உறங்கிவிட்டார். அத்துயிலிடையே கண்ட கனவையே குயிலின் பாட்டாகக் கொழி தமிழ்த் தேனில் குழைத்துக் கவிதைச் சுவையூட்டி, இன்னிசைத் தெள்ளமுதாக ஆக்கித் தந்துள்ளார்.