பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


“பலவகைத் தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேசமுடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்து போன ஆலயங்களை மறுபடி புதுக்கிக் கட்டிப் பிரதிட்டை புரிந்தோர், நெடுங்காலமாக நின்றுபோன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளித்தோர், வறண்டு மண்ணேறிப் போய்கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம்புரிவோர் என்னும் பலவகையாரினும் மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராதன பெருங்காவியங்களை பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்துக்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்திற் குறைந்தவர்கள் அல்லர். மேலும் புகழ் நிலைக்கும் தன்மையில் மற்றெல்லோரைக் காட்டிலும் இவரே சிறந்தவராவார்” (“சக்கரவர்த்தினி” இதழில் மகாமகோபாத்தியாய வாழ்த்து”க்கு முன்னுரை)

இவைகளைக்கொண்டு பாரதியார் காலத்தில் தமிழின் பேரிலக்கியங்கள் பல வெளிவராமைப் புலப்படும். இந்நிலையிலும் கிடைத்தவற்றை ஆர்வத்தோடு படித்தார்; சுவைத்துப் படித்தார்; துருவித் துருவிப் படித்தார்; உணர்ச்சிவயப்பட்டுப் படித்தார். படித்தவற்றைப் பழம் புலவர் பாங்கில் தமது கட்டுரைகளில் மேற்கோள் காட்டினார். அவ்வாறு மேற்கோள் காட்டப்பட்ட இடங்கள் பல. ஒரு சிலவற்றைக் காண்பது பாரதியாரது இலக்கியப் பார்வையைக் காண்பதாகும்.

திருக்குறள், கம்பராமாயணம், ஆத்தி சூடி முதலிய ஒளவையார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், ஆண்டாள் பாடல்கள், திருநாவுக்கரையர் தேவாரம், பட்டினத்தார் பாடல்கள் பிற அறநூல்கள் முதலியவற்றினின்றும் பாடல்களை மேற்கோள் காட்டுவது அவரது இயல்பாயிற்று.

57