பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பாரதியும் பாரதிதாசனும் சிற்றுண்டி அளித்தாள்; கடற்கரைக்கு அவர்களை அழைத்துச் சென்றாள். குளிர்ந்த காற்றை வாங்கச் செய்து, இயற்கை இன்பத்தில் திளைக்கச் செய்து வீடு திரும்பினாள். வீட்டின் விளக்கனைத்தும் ஏற்றினாள். உயர்நறும் புகையெழுப்பி வீட்டினுள் நன்மணம் கமழச் செய்தாள். பிள்ளைகளைச் செந்தமிழ்ச் சுவடிகள் படிக்கச் செய்து, அடுக்களையில் அமுதத்தை விளைவு செய்து எட்டு மணியளவில் தன் காதற் கணவனை எதிர்நோக்கி நின்றாள். கணவனோ நல்ல பிள்ளைகளைப் பெற்றதாற் பெற்ற பரிசுடன் வீடு வந்தான். அனைவரும் மகிழ உண்டனர்; அல்லிப்பூ விழிகள் மூடக் குழந்தைகள் உறங்கினர். தங்கம் தன் கணவனுடன், இன்று முழுவதும் நமக்காக வாழ்ந்தோமேயல்லாமல் தமிழிற்காகத் தினையளவேனும் வாழ்ந்தோமோ என்று கேட்டாள், உடனே கணவனும், "எப்படிக்கும் முதற்படியாய்த் தமிழ் படிக்கவேண்டும்; இழந்த பழம் புகழ் மீளவேண்டும்; நாட்டில் எல்லோரும் தமிழர்களாய் வாழவேண்டும்... விழுந்த தமிழ்நாடு தலைதூக்க என்றன் உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்று கூறினான். தங்கமோ இச்சொற்களைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து, "பழம் இடுவேன், சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள் பண்பாடும் வாய் திறப்பீர் அத்தான்" என்றாள். கணவன் "மண்ணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றும் மறுநாளே பழமை கொள்ளும்; ஒவ் வொன்றும் சில நாளில் தெவிட்டிப் போகும்; அன்றன்று புதுமையடி, தெவிட்டலுண்டோ: ஆருயிரே நீ கொடுக்கும் இன்பம்" என்று காதற்பெற்றியுரைத்தான். இவ்வாறு ஒருநாள் நிகழ்ச்சி முடிகின்றது.