பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தக் குறைகளையெல்லாம் ஓர் ஆங்கிலேய அதிகாரி எடுத்துக் காண்பிப்பதாக ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். அதில் சிலவரிகளை மட்டும் உங்களுக்கு இப்போது கீழே தருகிறேன்:

ஜாதிச் சண்டை போச்சோ?— உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்— கண்முன்
நிற்கொணாது போடா!

அச்சம் நீங்கினாயோ? — அடிமை
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் — ஆசை
பேணுதல் ஒழித்தாயோ?

ஒற்றுமை பயின்றாயோ? — அடிமை
உடம்பில் வலிமை உண்டோ ?
வெற்றுரை பேசாதே — அடிமை
வீரியம் அறிவாயோ?

(குறிப்பு: பேணுதல் - விரும்புதல்; பயின்றாயோ - கற்றாயோ; வெற்றுரை - வீண்வார்த்தை; வீரியம் — தைரியம்)

11