பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவறாமல் படித்து இன்பமடைய வேண்டும். அதில் வருகின்ற உயர்ந்த உண்மைகளெல்லாம் அப்பொழுது உங்களுக்கு நன்றாகப் புரியும்.

பத்திரிக்கை நடத்தும் முயற்சிகள் நின்றுவிட்ட பிறகு இப்படிப் பல சிறந்த கவிதை நூல்களைப் பாரதியார் இயற்றினார். பாஞ்சாலிசபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு என்ற நூல்களையெல்லாம் இப்பொழுது எல்லாரும் பாராட்டுகின்றார்கள். ஆனால் அந்தக் காலத்தில் யாரும் அவற்றின் அருமையைத் தெரிந்து கொள்ளவில்லை. அவற்றைப் பாராட்டவும் இல்லை.

அதனால் பாரதியார். வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். இருந்தாலும் மனம் தளராமல் ‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்’ என்று எண்ணி வாழ்ந்தார். கவிதை பாடுவதும், நாட்டிற்காக உழைப்பதும்தான் அவர் தொழிலாம்.

பாரதியார் வயது வந்தவர்களுக்கு மட்டும் பாடவில்லை. ‘குழந்தைகளுக்கும் பாடி இருக்கிறார். ஒளவைப் பாட்டி எழுதிய ஆத்தி சூடியை நீங்கள் படித்திருப்பீர்கள்.

அறம் செய விரும்பு
ஆறுவது சினம்

என்று இப்படி ஔவைப் பாட்டியின் ஆத்திசூடி ஆரம்பிக்கும்.

ஔவைப் பாட்டியிடத்திலே பாரதியாருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஒளவையாரைப் புகழ்ந்து பாரதியார் நீளமான ஒரு கட்டுரையே எழுதி இருக்கிறார். அதிலே ஔவையாரின் சிறப்பையெல்லாம் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

19