பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதனால் பாரதியார் பாண்டிச்சேரியை விட்டுத் தமிழ் நாட்டிற்குள் வரலாமென்று நினைத்து அடியெடுத்து வைத்தார். உடனே இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிறகு பல தலைவர்களின் முயற்சியால் இவருக்குச் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது.

பாரதியார் சென்னைக்கு வந்து சில நாள் தங்கிவிட்டுக் கடயத்திற்குச் சென்று வசிக்கலானர். கடயம் என்பது தான் இவர் மனைவி செல்லம்மாளின் ஊர்.

அங்கு நீண்ட நாள் வசிக்க இவருக்குப் பிடிக்கவில்லை. தாம் எழுதிய நூல்களை யெல்லாம் அச்சிட்டு வெளியிட முயற்சி செய்தார். அதுவும் வெற்றிபெறவில்லை. அந்தக் காலத்திலே தமிழ் மக்கள் இவரைப் போற்றத் தவறி விட்டார்கள்.

அதனல் கடைசியில் திரும்பவும் சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையில் துணையாசிரியராகச் சேர்ந்தார். பல கட்டுரைகள் எழுதினார். இடையிடையே பல சொற்பொழிவுகளும் செய்தார்.

பாரதியார் பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய காலத்திலேயே இவருடைய உடல் நிலை மோசமாக இருந்தது. உடம்பு எப்பொழுதுமே பாரதியாருக்கு மெலிவாகத்தான் இருக்கும். ஆனால் இவர் மனச் சோர்வு கொள்ளவே இல்லை. எந்தக் காலத்திலும் இவர் வேடிக்கையாகவும் நகைச் சுவையோடும் பேசுவார்; எழுதுவார். இவரைப் பார்த்தாலே யாருக்கும் நெஞ்சு நிமிரும்; தைரியம் பிறக்கும்.

பாரதியார் சென்னையில் திருவல்லிக்கேணியில் குடியிருந்தார். இவருக்கு தெய்வ பக்தி மிகுதியாக உண்டு. கடவுளைப் பற்றிய பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.

26