பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லா உருவத்திலும் கடவுளை வணங்கிப் பாடி இருக்கிறார். பக்தியினாலே பயன் மிகவும் உண்டு என்று இவர் தெளிவாகச் சொல்லுகிறார்.

இவருக்கு பராசக்திதான் விருப்பமான தெய்வம். ஆனால் இவர் மற்ற மூர்த்திகளையும் போற்றுவார். இவர் முருகனைப் பாடியிருக்கிறார். கிருஷ்ணனைப் பாடி இருக்கிறார். விநாயகரைப் பாடியிருக்கிறார். அதே போல இயேசுவைப் போற்றிப் பாடல் இயற்றி இருக்கிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வணங்கும் அல்லாவைப் பாடி இருக்கிறார். இவ்வாறு வெவ்வேறு பெயர் வைத்து வணங்கினாலும் கடவுள் ஒன்றே என்பது இவருடைய கொள்கை. இதுவே உண்மையுமாகும். தெய்வம் பலபல சொல்லிச் சண்டையிடுவது மூடத்தனம் என்று இவரே கூறியிருக்கிறார்.

அதனால் இவர் திருவல்லிக்கேணியிலிருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்போது கோவில் யானைக்கு இவர் தேங்காய் பழம் கொடுப்பதுண்டு.

ஒரு நாள் கோவில் யானைக்கு மதம் பிடித்திருந்தது. அப்படி இருக்கும் சமயத்தில் யாரும் அதன் அருகில் செல்லக் கூடாது. கோவில் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது என்பது பாரதியாருக்குத் தெரியாது. இவர் வழக்கம்போல் அதற்குத் தேங்காய் பழம் கொடுக்க அருகில் சென்றார்.

யானை இவரை உள்ளே இழுத்துத் தள்ளி விட்டது. பாரதியார் யானையின் காலுக்கருகில் கிடந்ததைப் பார்த்து இவருடைய நண்பரான குவளை-கிருஷ்ணமா சாரியார் என்பவர், இவரை அங்கிருந்து வெளியில் எடுத்துக் காப்பாற்றினார்.

27