பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான். எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த தெய்வம் நமக்கு அருள் செய்யும். தண்ணீரை ஜலம் என்று சொல்லுவார்கள்; வாட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். எந்தப் பெயராக இருந்தாலும் தண்ணீர் ஒன்று தான். அதைப் போலவே எந்தப் பெயர் சொன்னாலும் தெய்வம் ஒன்றுதான்.

வயிரம் மிகக் கெட்டியானது அல்லவா? அதைக் கொண்டு கண்ணாடியைக் கூட அறுத்து விடமுடியும். அப்படி வைரம் போன்ற தைரியம் உள்ள மனம் நமக்கு இருக்க வேண்டும். அப்படி உறுதியுள்ள நெஞ்சமுடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்கிறார் பாரதியார்.

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா,

இப்படி வாழ்வதுதான் முறை என்று பாரதியார் பாப்பாப் பாட்டை முடிக்கிறார்.

பாரதியார் தமது செல்லக் குழந்தைக்குச் சொல்வது போல எல்லாக் குழந்தைகளுக்கும் பல சிறந்த நீதிகளை இந்தப் பாட்டில் கூறியிருக்கிறார். இப்படிக், குழந்தைப் பருவம் முதற் கொண்டே நம் நாட்டுக் குழந்தைகள் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு வளரவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.

42