பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலைப் பொழிந்து தரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா,
வாலைக் குழைந்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா!...... 4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா !...... 5

காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும். விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!...... 6

பொய் சொல்லக் கூடாது பாப்பா!--என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத் துணை பாப்பா!-ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!...... 7

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!..... 8

துன்பம் நெருங்கிவந்த போதும் நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு -துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!..... 9

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!...... 10

44