பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கிறது. அதுபோலத்தான் தமிழிலே ஒரு புதிய மலர்ச்சியையும், தமிழ்நாட்டு மக்களிடத்திலே ஒரு புதிய சக்தியையும் உண்டாக்கிய பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது இந்திய நாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த மஹாத்மா காந்தியை நாம் நமது நாட்டின் தந்தை என்று கொண்டாடுகிறோமல்லவா? அவருடைய வாழ்க்கை ஓர் அதிசயமான வாழ்க்கை. அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதுபோல பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாரதியாரின் முழுப் பெயர் சுப்பிரமணிய பாரதியார் என்பதாகும். இவருடைய தந்தையின் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயின் பெயர் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு பாரதியார் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பிறந்தார்.

பாரதியார் பிறந்தது எட்டயபுரம் என்ற சமஸ்தானத்தில். இந்த சமஸ்தானத்திற்கு ஒரு ராஜா இருந்தார். அந்தக் காலத்தில் இப்படிச் சின்ன சமஸ்தானங்கள் இந்தியாவிலே நிறைய இருந்தன. ராஜா என்ற பெயரிலும், ஜமீன்தார் என்ற பெயரிலும் பலர் அவற்றின் தலைவராக இருந்து வந்தார்கள். அவர்களும் ஆங்கிலேயருக்கு அடங்கியவர்கள்தான்; தனிப்பட்ட சுதந்திரம் உடையவர்கள் அல்ல.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு இவைகளெல்லாம் மறைந்துவிட்டன. இந்தியா ஒரு பெரிய நாடாக ஆயிற்று. இப்போது தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் என்றிப்படி மாநிலங்கள்தான் உண்டு. எட்டயபுரம்

5