பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 5

மீறி நிலைத்து நிற்கும் ஆற்றல் இயல்பாகவே அமைந்திருக்குமானால், நிச்சயமாக அது கருத்தால் உயர்ந்தது என்று சொல்லி விடலாம். இதன் எதிராக அன்றாடப் பிரச்சினைக்கு விடையிறுப்பதற்காகவும் தம்மைச் சேர்ந்தவர்கள் கைகொட்டி ஆரவாரித்து ‘இதோ ஓர் அற்புதப் படைப்பு’ என்று சொல்லுவதற்காகவும் தோன்றுபவை மக்களினுடைய ஈடுபாடு திசை திரும்பியவுடன் இருந்த இடம் தெரியாமல் போய்விடக் காண்கிறோம்.

மேலே கூறிய இரண்டு கருத்துகளையும் மனத்தில் வைத்துக்கொண்டு இன்றைய இலக்கியத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோமேயானால் அளவால் மிகுதியாகவுள்ள இவ்விலக்கியப் பகுதிகளுள் எவை எவை நின்று நிலவக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளன என்று அறிய முடியும். ஏன், அளவால் இவ்வளவு குறைந்த இலக்கியங்கள் மட்டுமே நிலைபெறும் ஆற்றலைப் பெற்றுள்ளன என்று சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞனுடைய மனத்தில் கிடந்து, பல்லாண்டுகள் ஊறி, அவனுடைய கற்பனையிலே வடிவு பெற்று வெளி வருகின்ற கருத்துகள், அவனுடைய ஆழ்ந்த அனுபவம், சிந்தனை என்பவற்றின் அடிப்படையில் பிறந்திருக்குமேயானால், காலத்தை வென்று நின்று நிலவும் வலுவைப் பெற்று விடும், இன்றைய அவசரமான வாழ்க்கையில் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கிய எழுத்தாளர்கள் எந்த ஒன்றைப்பற்றியும். இந்த அளவு நின்று நிதானித்து, சிந்திக்கவோ, ஆராயவோ, தெளியவோ, அங்ஙனம் தெளிந்த எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கவோ வாய்ப்பும் வசதியும் அவகாசமும் பெறவில்லை .