பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 அ. ச. ஞானசம்பந்தன்

மனத்துட் தோன்றிய கருத்துகள் நன்கு தெளிவடையாமல் வெளிவருகின்றன. எனவே, அவற்றில், ஆழமோ உள்ளீடோ இருப்பதில்லை. இவை இல்லாமல் போனாலும் போகட்டும்-- கருத்துகளாவது இருக்கின்றனவா என்றால், எல்லா எழுத்தாளர்களுடைய எழுத்திலும் இவை இருக்கின்றன என்று கூறவும் முடியவில்லை. அவருடைய படைப்பைப் பார்த்த பிறகு, ‘இவர் என்ன கூறுகிறார்’ என்றே அறிய முடிவதில்லை. காரணம்-- வெறும் சொற் கோவைகளை நீக்கிப் பார்த்தால், அவர் சொல்லியது ஒன்றுமே இல்லை என்ற உண்மை புலப்படுகிறது. அப்படியானால் அவர் ஏன் எழுதினார்? அதனை ஏன் அச்சிட்டு நம்மிடம் வழங்கினார்கள்? ‘ஏதோ எழுத வேண்டும்’ என்று பக்கத்தை நிரப்ப அவரும் எழுதினார்; அச்சுப் பக்கத்தை நிரப்ப அது பயன்பட்டது. பெரும்பாலும் இந்நிலையில் உள்ள எழுத்துக்கள்தாம் இன்றைய நிலையில் இலக்கியம் என்ற பெயருடன் உலவுகின்றன. சிறுகதை முதல் நாடகம் வரை எந்த வடிவத்தில் உலவினாலும் இதே கதைதான்.

ஆனால், இவ்வாறு கூறுவதால் சிறந்த எழுத்துக்களே தமிழ் மொழியில் சென்ற கால் நூற்றாண்டில் தோன்றவில்லையோ என்று கருதிவிட வேண்டா தோன்றியுள்ளன். ஆனால், அவை அளவால் குறைந்தவையேயாகும். உள்ளீடற்ற தோற்றம் மிகுதியாகவும் ஆழமுடையவை குறைவாகவும் தோன்றக் காரணம் என்ன? காரணம் பலவகைப்படும். அவற்றுள் முதன்மையானது படிப்போர் எண்ணிக்கை மிகுதிப்பட்டது. அவர்கட்கு இரை போட் வேண்டி வார இதழ்கள், மாத இதழ்கள் முதலியவற்றுடன் நூல் வெளியீடுகளும் அளவால் மிகுந்துவிட்டன. கருத்துகள்