பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 7

முழுவடிவம் பெறுமுன்னரே. அரைவேக்காட்டுடன் எடுத்து வடிக்கப்படுவதன் விளைவை இன்று காண்கிறோம்.

இனி, இரண்டாவதாக, ஒன்றை நோக்கல் வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் எவ்வளவு புதுமைக் கோலங் கொண்டாலும், எவ்வளவு புதிய வழிகளை மேற்கொண்டாலும் தமிழ்மொழி அவற்றை இரு கை ஏந்தி வரவேற்கத் தயாராகவே உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு மொழி நிலை பெற்று வாழ்கிறதென்றால், வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்று கொண்டதால்தான் அது வாழ்கிறது; இன்றேல் அது வாழும் மொழியாக இருத்தல் இயலாது.

மாற்றமும், வளர்ச்சியும் அடிப்படை உடையனவாக இருத்தல் வேண்டும். பைசா நகரத்துக் கோபுரம் பதினைந்து பாகை சாய்ந்திருப்பதால் நிற்கவும் செய்கிறது; புதுமையாகவும் இருக்கிறது. ஆனாலும் வலுவுடைய கடைகாலுடன் இருக்கிறது. ஆனால், அதே கோபுரம் என்பது, பாகை சாய்ந்தால் நிலை பெற முடியாது. மாற்றமும், வளர்ச்சியும் ஓர் அளவுக்குட்பட்டிருப்பதுடன் பழமையின் கடைகாலின் மேல் கட்டப்படவேண்டும்.

இற்றை நாள் எழுத்துக்கள் பழமையின் தொடர்பில்லாமல் மரபுவழி உணர்வில்லாமல்--- மாற்றம், வளர்ச்சி என்ற பெயருடன் நிலைபெற முற்படும் பொழுது அடிப்படை வன்மை இன்மையின் ஆட்டங் கண்டு வீழ்ந்துவிடுகின்றன, இந்த அடிப்படையில் நிலைபேறுடைய இலக்கியங்களைப் படைக்கக்கூடிய ஆற்றலுடையவன் தமிழ் எழுத்தாளன் என்பதில்