பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 அ. ச. ஞானசம்பந்தன்

துறையேயாகும். பல பாடல்கள் அல்லது, பல பக்க உரைநடை மூலம் புகட்ட முடியாத ஒன்றை ஒரு சிறு நாடகக் காட்சி மூலம் புகட்டிவிட முடியும் என்பதை இத்தமிழர் என்றோ கண்டுவிட்டனர். அதனாலேயே தம் உயிரனைய தமிழ் மொழியையே முத்தமிழ் என்று கூறிட்டு அதில் ஒன்றாக நாடகத் தமிழை வைத்தனர். இந்த நுணுக்கத்தை நன்கறிந்த இப் பெரியார் நாடகத் துறையைத் தம் குறிக்கோளுக்குப் பயன்படுத்திக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை.

மிகப் பலவாய நாடகங்களையும் கீர்த்தனைகளையும் சுவாமிகள் எழுதியுள்ளார்கள் என்று அறிகிறோம். தமிழ் நாடகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் பலரைச் சுவாமிகள் உருவாக்கித் தந்துள்ளார் என்பதையும் அறிகின்றோம். ஒளவை சண்முகம் போன்றோர் தமிழ் நாடக உலகின் முடி மணியாய் விளங்குமாறு செய்த பெரியார் இரண்டு துறைகளில் மேம்பட்டு விளங்கினதை அறிய முடிகிறது. சிறந்த நடிகர்களை ஆக்கிய திறன் முதலாவது; அத்தகைய சிறந்த நடிகர்கள் சிறப்பைப் பெறத்தக்க முறையில் சிறந்த நாடகங்களை ஆக்கிப் படைத்த திறன் இரண்டாவது.

ஓர் இரவில் ஒரு முழு நாடகத்தை எழுதி முடித்த சிறப்பைத் திரு. சண்முகம் அவர்கள் எழுதிய சுவாமிகளின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். நடிகர்கள் தாம் மேற்கொண்ட பாத்திரத்திற்கேற்ப உரையாடல் அமைய வேண்டும். உரை நடையாயினும் பாடலாயினும் இதனை மனத்துட் கொண்டு அமைக்க வேண்டும். பாத்திரத்தின் தகுதி, சிறப்பு இடம் என்பவற்றிற்கேற்ப உரையாடல் அமைப்பதில்தான்