பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 11

நாடகாசிரியனின் சிறப்பை அறிய முடிகிறது. உதாரணமாக ஒன்றைக் காணலாம். சுலோசனா சதி என்பது இந்திரசித்தன் பற்றிய. நாடகம். முதன் முதலாக இந்திரசித்தன் ஆதிசேடன் மகளாகிய சுலோசனையைக் கண்டு அவளை விரும்பி அவளுடன் உரையாடும் இடத்தில் அடிகளின் கவிதைத் திறம், புலமை நயம், பழைய இலக்கியங்களில் அவரது புலமை ஆகிய அனைத்தையும் காண முடிகிறது.

தன்னை மணக்க விரும்பும் வீரனைக் கண்ட மாத்திரத்தில் . அவனுடைய வீரம், வன்மை, கூர்த்த அறிவு, கல்வி நலம் ஆகிய அனைத்தையும் ஒரு நொடியில் அறிந்து விடுகிறாள் சுலோசனை. அப்படி இருக்கத் தன்னை விரும்பும் அவனைக் கடிய வேண்டுமானால் என்ன கூறிக் கடிவது! ‘என் தந்தையார் வந்து விடுவார், உன்னை வென்று விடுவார்’ என்று கூறினால் அது அசம்பாவிதம். எனவே, ஒரு தூய வீரன் எதனைக் கண்டு அஞ்சுவானோ அதனை எடுத்துக் காட்டி அச்சுறுத்துகிறாள். கலித்தொகை என்ற பழந்தமிழ் இலக்கியம் தூயவர்கள், வீரர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவரும் அஞ்சும் பொருள் ஒன்றை எடுத்துக் கூறுகிறது.

கழியக் காதல ராயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்

என்று பேசுகிறது. ‘எத்துணை ஆசை இருப்பினும், இன்பத்தை விரும்பினும், அந்த இன்பத்தால் பழி’ வருவதாயின் பெரியோர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் பொருள். இந்த இலக்கிய நயம் அறிந்த சுவாமிகள் சுலோசனையின் கூற்றாக இதனைப் பெய்கிறார்.