பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ. அ. ச. ஞானசம்பந்தன்

வளம் ஆகியவற்றை மிக மிக அதிகமான் அளவு பெற்றிருக்கிறார் என்பதும், காலத்தின் போக்கில் அரசியல் சூழ்நிலையில் அகப்பட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் தம் கவிதைத் திறத்தைக் குறைத்துக் கொண்டு கூடப் பிரசார நோக்கத்தில் ஒருசில கவிதைகள் இயற்றியிருக்கிறார் என்பதும், காலாந் தரத்தில் பிரசார நோக்கத்தில் எழுந்த இக்கவிதைகள் கால வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படும் நிலை ஏற்பட்டாலும், நூற்றுக்கு 85 விழுக்காடு உள்ள அவருடைய உயிர்த் துடிப்புள்ள கவிதைகள் என்றும் நின்று நிலவிப் புரட்சிக் கவிஞரின் தரத்திற்கு எடுத்துக் காட்டாக இலங்கும் என்பதில் ஐயமில்லை என்பதும் இச்சொற்பொழிவின் முடிப்பாகக் கொள்ளலாம்.

குருவும் சீடருமாக அமைந்துள்ள இவ்விரண்டு பெருமக்களும் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய் கின்ற முறையில் நாட்டுப் பாடல்களும், சமுதாயப் பாடல்களும் முறையே இயற்றினர். என்றாலும், தமிழ் இலக்கியம் உள்ளளவும் நின்று நிலவக் கூடியவை அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்த இப்பாடல் மட்டுமல்ல என்பதும், காலத்தை வென்று நிலவக் கூடிய கருத்தாழம் சொல் ஆழம் உடையவையுமான பல்வேறு ஒப்பற்ற கவிதைகள் இயற்றியுள்ளனர், இந்த இரண்டு பாவேந்தர்களும். ஆதலால், தமிழ் இலக்கிய உலகில் இருவருக்கும் அழியாத இரண்டு இடங்கள் உண்டு என்பதும் மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். '