பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 18

அகங்காரம் பிடித்த பைத்தியக்காரன் ஒருவன் இருக்க முடியாதன்றோ! என்றாலும், சுலோசனையின் அன்பை யாசிக்கும் இந்திரசித்தன் இதோ பேசுகிறான்.

ஒரு உலகத்துக்கு இறையோன் உனது தந்தை;
மூவுலகுக்கு உரிமை பூண்டு வரும்
இறையோன் எனது தந்தை நினதுவாசம்
கீழ்நகரம்; வனப்பு மிக்க
பெருமைபெறும் என்வாசம் மேல்நகரம்
எனைக்கூடில் பிழைவ ராது;
திருஉருவம் உடையாளே என் பின்னே
வருவதற்குத் திடங்கொள் வாயே.

தான் விரும்பும் ஒரு பெண்ணின் முன்னர்த் தன் பெருமையைப் பேசுவதையாவது மன்னிக்கலாம். ஆனால், அவள் பெருமையை-- அவள் தந்தை பெருமையை-- அவள் நாட்டின் பெருமையைப் படியிறக்கிப் பேசுபவன் எத்தகையன்? “என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக் கொண்டேன்” என்று கூறும் அகங்கார வடிவினனாகிய இராவணன் மகனாகத்தான் இருக்க முடியும். இந்திரசித்தன் குணாதிசயங்களுள் தலையாய் நிற்கும் பண்பு அகங்காரமேயாகும். கம்பராமாயணங் கற்ற யாரும் இதனை அறிவர். ஒப்பற்ற நாடகாசிரியராகிய அடிகள் இந்தச் சிறந்த பாடல்மூலம் அந்தப் பாத்திரத்தின் பண்பைச் சாறு பிழிந்து தந்து விடுகிறார்.

இத்துணை அகங்காரமுடையோரும் காமத்தால் கண்டுண்டபொழுது தம் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு எளியராகி விடுகின்றனர். அகங்காரத்தின்

பா- 2