பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 அ. ச. ஞானசம்பந்தன்

அடிப்படையில் எழும் இது. காதலன்று. உண்மைக் காதலில் தலைவியின் நலத்திலேயே கண்ணோட்டமிருக்கும். அகங்காரத்தில் விளைந்த காமத்தில் தன்வெறி தணிக்கும் ஆசை மட்டுமே எஞ்சுவதால் மானத்தை விட்டேனும் தன் ஆசையைத் தணிக்க முனைகிறான் மனிதன். எனவேதான், காமங் கொண்டவன் மான அவமானம் பற்றிச் சிந்திக்க முற்படுவதில்லை. இக் கருத்தை அடிகளார் சுலோசனையின் விடையில் நன்கு விளக்குகிறார்.

ஆசைகொண்ட பேர்களுக்கு ரோசமில்லை
என்னும் மொழி அவனிமீது
பேசுகின்ற நிலைமைதன்னை இன்றறிந்தேன்;
உம்மிடத்தில் பின்யாது என்றால்
கூசுகின்ற நிலையன்றி யாசகர்போல்
எனைவிரும்பல் குளிக்கச் சேறு
பூசுகின்ற நிலையன்றோ? உமதுகுல
மேன்மைநல்ல புதுமை யாமே!

‘குலப் பெருமை பேசுகின்ற உன்னிடம் மானம் இல்லை; ஏன் எனில் இவ்வளவு பெருமை பெற்றுள்ளதாகக் கூறும் நீ கேவலம் பெண்ணாகிய என்னிடம் மானத்தைவிட்டு யாசகர்போல் கெஞ்சுகிறாய்’ என்று சுலோசனை விடை கூறுகையில் இந்திரசித்தன் அகங்காரத்திற்கு நல்ல அடி தருகின்றார்.

நாடகத்தில் உரையாடல் மூலமாக மட்டுமே பாத்திரங்களின் பண்புகளை விளக்க வேண்டும் என்ற திறனாய்வாளர் இலக்கணத்திற்குச் சுவாமிகள் எத்துணைச் சிறந்த இலக்கியமாகிறார் என்பதற்கு இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமானவை.