பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 15

அவருடைய சொல்லாட்சித் திறத்திற்குச் சிறந்த உதாரணமாய் விளங்குவது. “மா பாவியோர் கூடி வாழும் மதுரை” என்ற வாக்கியமாகும். இவ்வாறு திடுக்கிடும் ஒரு அடியைக் கூறிவிட்டு “மா என்றால் அலைமகள், பா என்றால் கலைமகள், வி என்றால் மலைமகள்; எனவே, இம் மூவருங் கூடி வாழும் மதுரை” எனப் பொருள் விரிப்பவரின் புலமை நயத்தை யாரே மறுக்கமுடியும்?

ஆசிரியப்பா நடையையும் அடிகள் அழகுறக் கையாண்டுள்ளார். ஒரு தாயும் மகனும் தம்முள் உரையாடும்பொழுது அது எவ்வளவு சகச பாவத்தில் நடைபெறுகிறது என்பதைக் காட்ட ஆசிரிய நடையை ஓரளவுக்கு விரிந்த மனப்பான்மையில் ஆசிரியர் இதோ கையாள்கிறார். கடோத்கஜனின் தாயும் அபிமன்யுவும் இதோ உரையாடுகின்றனர்:

வனவாசம் போனவர்கள் சேதிகள்
அடிக்கடி வந்து கொண் டிருக்குதா, வரவில்லையா?
.... ....... ........ ........ ....... ......
காட்டிலும் கௌரவர் கூட்டிய படையொடு
கலகஞ் செய்தனர் என்று கேள்வியுண்டு
கடவுள் கிருபையினால் இடரொன்றும் நேரவில்லை
கவலை விடுவாயம்மா மகிழ்ச்சி கொண்டு.

கடிய சொற்களை இங்கே பெய்திருக்க மாட்டார் சிறந்த நாடகாசிரியர். அபிமன்யுவாகிய குழந்தையும் அரக்கப் பெண் ஒருத்தியும் உரையாடும் பொழுது இவ்வாறு எளிய சொற்களைப் பெய்து உரையாடல் அமைக்கும் ஒருவர் நாடக நுணுக்கம் அனைத்தும் அறிந்த நாடகாசிரியர் என்று கூறுவதில் தவறொன்றுமில்லை.