பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 அ ச ஞானசம்பந்தன்

திருக்குறளைக் கரைத்துக் குடித்த இப் பெரியார் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் நன்கு. தோய்ந்துள்ளார் என்பதை இவர் பாடல்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன. குறள் மொழிகளை அப்படியே எடுத்தாளுவதிலும் வல்லவர் என்பதைக் கீழ்வரும் பகுதிகள் விளக்கும்:

பற்றற்றான் பற்றினைப் பற்றென்று சொன்னதும்
பாவனை உண்மையின் மார்க்கம்
சற்றும், சந்தேகமில்லை குறளாகிய
சாத்திரம் ஒன்றுமே போதும்
சர்வகலா சார ஞானம் தரும்அது
தன்னைப் படிப்பாய் எப்போதும்

அனைத்துலகிற்கும் ஏற்கக்கூடிய ஓர் ஒப்புயர்வற்ற நீதி நூலை வள்ளுவர் வழங்கினார் என்பதைச் ‘சர்வகலாசார ஞானம் தரும்’ என்ற அடியால் எண்பதாண்டுகட்கு முன்னரே இப் பெரியார் கண்டு கூறியது வியப்பினும் வியப்பே.

தமிழே சிறந்தது என்ற கீர்த்தனையில் அவருடைய இலக்கணப் புலமையை அறியும் வாய்ப்பு ஏற்படுகிறது.

திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி
சேர்ந்த விதங்கள் எல்லாம் தென் மொழிக்கே தகுதி

எனப் பாடிச் செல்கிறார் பெரியார்.

பழங்கால நாடகப் பாடல் என விட்டு விடாமல் ஆழ்ந்து நோக்கினால் அவருடைய புலமை வரம்பை அறிந்து மகிழலாம்.