பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதி

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ் கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினையுடைய தமிழ்த் தாய், பல்லாயிரம் ஆண்டுகள் முன்னர்த்தொட்டு இன்றளவும் கன்னித்தன்மை குலையாமல் வளர்ந்து வரும் இயல்பினை உடையவளாவாள். இவள் காலத்தில், இவளோடு தோன்றிய எத்தனையோ, நூற்றுக் கணக்கான மொழிகள் முற்றிலும் வளர்ச்சி அடையாமலோ, அன்றி நன்கு வளர்ந்த பின்னரோ இன்றைய நிலையில், பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. எனவே, அன்றிலிருந்து இன்றுவரை பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் இளமை குன்றாது வளர்ந்து வருகின்ற தனிச் சிறப்பு அகில உலக மொழிகளுள் தமிழ்த் தாய் ஒருத்திக்கே உரியதாகும். 2,000 ஆண்டுகளில் கூட மிகச் சிறிய வேறுபாடுகள் தவிர புரட்சிகரமான மாறுதல்கள் எவையும் இன்றி இருந்து வரும். சிறப்புத் தமிழ்த் தாய்க்கே உரியது.