பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 அ. ச. ஞானசம்பந்தன்

கிறித்துவின் காலத்தையொட்டி வளர்ந்த சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் தவிர, அதனையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், பின்னர்த் தோன்றிய மணிமேகலை இதனையொட்டித் தோன்றிய பெருங்கதை என்பவற்றுடன் திருக்குறள் நீங்கலாக உள்ள பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் என்பவை ஒருபுறம் மிளிர இடைக் காலத்தில் சிந்தாமணி, கம்ப இராமாயணம், பெரிய புராணம் என்ற பிற இலக்கியங்கள் ஒருபுறம் மிளிர்ந்து நிற்கின்றன. 12-ஆம் நூற்றாண்டை அடுத்து இத்தகைய பெரும் இலக்கியங்கள் தோன்றவில்லை என்றாலும், சாத்திர நூல்கள் தோன்றலாயின. 10 நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களாகவே உள்ள மேலே கூறிய நூல்கள் ஒருபுறம் இருக்க, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 18-ஆம் நூற்றாண்டுக்குள் சைவ வைணவ சமய குரவர்கள் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பெருநூல்களும் யாத்துத் தந்தனர். இவற்றைச் சமய இலக்கியங்கள் என்று கூறலாம். இச் சமய இலக்கியங்களின் பின்னர்ப் பெருங்காப்பிய இலக்கியங்கள் புதிய முறையில் விருத்தப் பாவில் தோன்றின். சமய இலக்கியங்கள் பழைய , சங்கப் பாடல் முறையைத் தவிர்த்து, அதாவது ஆசிரியம், கலி என்பவற்றை நீக்கி, விருத்தப்பா என்னும் புது முறையைக் கையாண்டன.

மனித உணர்ச்சியை வெளியிடும் சாதனமாக உள்ள கவிதை, ஆசிரியம், கலி ஆகிய வகைகளில் வெளிவரும் பொழுது முழு உணர்ச்சியையும் வெளிப்படுத்த இடந்தாராமையால் அதற்கேற்ற முறையில் விருத்தப் பாக்கள் அமையலாயின. இக் காரணத்தாற்