பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 19

போலும் பின்னர்த் தோன்றிய இலக்கியங்கள் யாவும் ஒரோவழி ஆசிரியப்பா முறையை மேற்கொண்டனவே தவிர, நூற்றுக்கு 90 விழுக்காடு விருத்தப்பா முறையையே மேற்கொண்டன.

12-ஆம் நூற்றாண்டை அடுத்துப் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை என்றாலும், 19-ஆம் நூற்றாண்டு முடியச் சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. தமிழில் உரைநடையும் உரையாசிரியர்களால் பெரிதும் போற்றி வளர்க்கப்பட்டது. இவ் இடைக்காலத்தில் கவிதைக் கலைஞர்க்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக நிற்பவர்கள் குமரகுருபர சுவாமிகளும் சிவப்பிரகாசரும் ஆவர். உரைநடைக்கு எடுத்துக்காட்டாக நிற்பவர் மாதவச் சிவஞான யோகிகள் ஆவார். 7-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு முடியத் தோன்றிய நூல்களுள் ஏறத்தாழ ,அனைத்துமே சமயச் சார்புடையனவாக அமைந்து விட்டன. 17, 18, 19 ஆகிய நூற்றாண்டுகளில் தல புராணங்கள் என்னும் புதிய முறை இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. இவை அனைத்தும் சமயச் சார்புடையனவேயாயினும் ஒரு சில தல புராணங்கள் தவிரப் பிற. அனைத்தும் கவிதைத் தன்மையை இழந்து வெறும் செய்யுள் என்ற நிலைமையை எய்தின. இந்தக் கட்டத்துள் சிறந்த கவிதை என்று சொல்லத் தகுந்த சிறப்புடன் கூடிய பாடல்களை இயற்றிய பெருமை இருவருக்கே உரியது. அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் வடலூர் இராமலிங்க வள்ள லாரும் ஆவர்.

இவ்விருவர் இடையேயும் மலை அத்தனை வேறுபாட்டைக் காணமுடியும், மகாவித்துவான்