பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 அ. ச. ஞானசம்பந்தன்

பிள்ளையவர்களுடைய பாடல்கள் நாளிகேரபாகம் (தேங்காய்) என்று சொல்லத் தகுந்த முறையில் கடுமையான சொல்லாட்சியைப் பெற்று நின்றன. இதனெதிராக வள்ளலாருடைய பாடல்கள் திராட்சா பாகம் என்று சொல்லக்கூடிய முறையில் மிக எளிய தொடர்களைக் கொண்டு கற்றாரும் கல்லாதவரும், வல்லாரும் மாட்டா தவரும் படித்துப் பயன் அடையக் கூடிய முறையில் அமைந்தன.

வள்ளலாருடைய பாடல்களில் உள்ள எளிமைச் சிறப்பு ஒருபுறமிருக்க, அதுவரையில் நாட்டில் இல்லாத ஒரு புதுமையைப் புகுத்திய சிறப்பும் அவரைச் சார்ந்ததாகும். சமரசம் என்ற சொல்லை அவருக்கு முன்னர்த் தாயுமானவப் பெருந்தகை கையாண்டிருந்தாலும், அவருடைய பாடல்கள் கடினமாக இருக்கின்ற காரணத்தால், அதிகம் நாட்டில் செலாவணியாகவில்லை. அந்தச் சமரசத்தையடுத்து அனைவரும் அறிந்து பயனடையக்கூடிய முறையில் மிக எளிய பாடல்களில் புகுத்தி மக்கட்கு வழங்கிய பெருமை வள்ளலாருக்கே உரியதாகும். ஒரு வகையில் பார்த்தால், கவிதை உலகிலும், சமய உலகிலும், பண்பாட்டு உலகிலும் 19-ம் நூற்றாண்டில் மாபெரும். புரட்சி செய்து தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிப் பக்தி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்த பெருமை இராமலிங்க வள்ளலாருக்கே உரியதாகும்.

19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் தோன்றி 20-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வாழ்ந்த மாபெரும் கவிஞர்களைத் தமிழர்கள் என்றும் மறத்தற்பாலர் அல்லர். துரதிருஷ்டவசமாக இம் மூவருமே இன்று இல்லை. கவிமணி தேசிக விநாயகம்