பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 23

சிறப்பாக தமிழ்நாட்டின் நிலையையும் சற்றுக் கூர்ந்து காண்டல் வேண்டும். இந்திய நாட்டின் அரசியல் நிலைமையும், தமிழ்ச் சமுதாய வாழ்க்கை நிலைமையும், தமிழ் இலக்கிய உலகின் நிலைமையும் அவ்வளவு விரும்பத் தகுந்ததாக இல்லை என்று அறிய முடியும். அதுவரை அடிமைப்பட்டுக் கிடந்த நாட்டில் உரிமை வேட்கை ஏற்பட்டுத் திலகர், லஜபதி போன்ற பெரியோர்களின் தூண்டுதலால் நாடு முழுவதும் தோன்றிய கொந்தளிப்பு மகாத்மா என்ற உதயசூரியனால் திசை திருப்பப் பெற்றிருந்த காலமாகும் அது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற பெரும் புரட்சியாளர்கள் மக்களைத் தட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக இறங்கித் தம்மைத் தாமே தியாகம் செய்கின்ற சூழ்நிலையில் இருந்து வந்தனர். அரசியல் நிலைமையில் ஏற்பட்ட இந்தக் கொந்தளிப்பும் புரட்சியும் சமுதாயத்தையும் பற்றாமல் இல்லை. அரசியலில் விடுதலை வேண்டுமானால், அந்த விடுதலையைப் பெற்று அனுபவிக்கக்கூடிய ஆற்றல் சமுதாயத்திற்கு வேண்டுமென்றும், சமுதாயத்தில் வாழும் மக்கள் சாதி, சமயப் போராட்டங்களில் கருத்தைச் செலுத்தி ஒருவரையொருவர் அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி வாழ்வார்களேயானால், அத்தகைய மக்கள் உரிமைக் குரல் எழுப்பத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் மகாத்மா போன்ற அரசியல் புரட்சி வீரர்களால் விரிவாகப் பேசப் பெற்றது.

எனவே, பன்னெடுங் காலமாக இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஊறியிருந்த மூடப்பழக்க வழக்கங்களைத் தகர்த்து எறியும் முறையில் சமுதாயப் புரட்சிக்கும் விதை விதைக்கப்பட்டது. கவிஞன் தான்