பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 அ. ச. ஞானசம்பந்தன்

யும் அறிகிற அதே நேரத்தில், பிற மொழிகளின் சிறப்பையும் அவற்றிலும் அவற்றின் பண்பாட்டை வளர்க்கும் ஆற்றல் உண்டு என்பதையும் அவர் அறிய முடிந்தது.

“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்”, “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே” என்றும் பாடிய கலைஞர், இந்தக் குறுகிய நோக்கத்தோடு நின்று விடாமல், பாரத சமுதாயம் முழுவதையும் தம்முடையதாக நினைந்து. அதற்கு மேலும் ஒருபடி சென்று அகில உலகத்தையும் சகோதர பாவத்துடன் நோக்கும் பேராற்றலைப் பெற்றிருந்தார்.

தாய்மொழிமாட்டும் தாய் நாட்டின் மாட்டும் இத்துணை ஆழ்ந்த பக்தி கொண்ட ஒருவர், இவற்றை கடந்து அகில உலக சகோதரத்துவத்தைக் காண் நேரிட்டதற்குக் காரணம் இந்த நாட்டின் பழைய இலக்கியத்தைப் பயின்றிருந்தமையும் பிற மொழிகளை நன்கு பயின்றமையும் ஆழ்ந்த தெய்வ பக்தி உடைமையுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

வேர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞர் ‘ப்ரிலூட்’ (Prelude) கவிதையில் தம் சுயசரிதையைப் பேசுவதுபோல, பாரதியும் . சுயசரிதை பாடியிருக்கின்றார். அதனைப் படிக்கும் பொழுது, ‘தேச பக்திப் பாடல்களும் புதிய ஆத்திசூடியும் எழுதிய அதே கவிஞரா இவர்’ என்ற ஐயம் தோன்றத்தான் செய்கிறது. மிக இளமையிலேயே வறுமையோடு போராடிய கவிஞருக்கு, நாடு முழுவதும் அல்லலுறும்