பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியும் பாரதிதாசனும் 27

அவல நிலைமையைக் கண்டு நாளாவட்டத்தில் தம்முடைய சொந்த வறுமையை மறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இளமையில் அவரைத் தாக்கிய வறுமையின் பால், சினமுற்று, அந்த வறுமைக்குக் காரணமானவர்களைச் சாடவேண்டுமென்ற நினைவு இருத்தல் கூடும். ஆனால், அதனை அடுத்துத் தோன்றிய நாட்டின் அவல நிலையைக் கண்டபொழுது தன் வறுமையின் மாட்டுத் தோன்றிய சினம் நாட்டின் அவல நிலையை உண்டாக்கியலர்கள் மேலும் பாயத் தொடங்கியிருக்கிறது. “நிகழ்கின்ற இந்துஸ்தானமும் வருகின்ற இந்துஸ்தானமும்”, “சுதந்திரப் பெருமை”, “சுதந்திரப் பயிர்”, “சுதந்திர தாகம்” என்ற பாடல்களையும் “சத்திரபதி சிவாஜி தன் சைன்யத்திற்குக் கூறியது” என்ற பாடலையும் பார்க்கும்பொழுது. பழைய பாரதியின் சின உண்மை தெரிகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட பகுதியில் வரும் இவ்வடிகள் காண்க:

சூரர் தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்;
வீரிய மழிந்து மேன்மையு மொழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?
பெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து கொல் வாழ்வீர்?
மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்,
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
மானமொன் நிரலது மாற்றலர் தொழும்பராய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?