பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 அ. ச. ஞானசம்பந்தன்

தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?
பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்.

தம்முடைய கட்சியில் மாறுபட்ட கருத்துடையவர் சுளைப் பார்த்து எள்ளி நகையாடுகின்ற பாாதியைக் “கோகலே சாமியார்” என்ற பகுதியில் காண்கிறோம். தீவிர வாதத்தில் இத்துணைப் பற்றுக் கொண்டிருந்தால்தான் இம்மாதிரிப் பாட வரும். இத்தகை ஒருவருக்குக் “கோகலே” போன்ற மிதவாதிகளிடம் வெறுப்புத் தோன்றியதில் புதுமை இல்லை.

களக்கமுறும் மார்லி நடம்
கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம் பூத்துக்
காய்த்ததொரு கனிதான்
விளக்கமுறப் பழுத்திடுமோ
வெம்பிவிழுந் திடுமோ?
வெம்பாது விழினு மென்றன்
கரத்திலகப் படுமோ?
வளர்த்த பழம் கர்சானென்ற
குரங்குகவர்ந் திடுமோ?
மற்றிங்ஙன் ஆட்சி செயும்
அணில் கடித்து விடுமோ?
துளக்க மறயான் பெற்றிங்
குண்ணுவனோ, அல்லால்
தொண்டை விக்குமோ, ஏதும்
சொல்லரிய தாமோ?